இஸ்ரேலியர்களின் வரலாறு - ஜோசப்பின் இளமை வாழ்க்கை
ஆப்ரஹாம் - இஸ்ஹாக் - ஜேக்கப் - ஜோசப் என்று நான்காம் தலைமுறைக்கு அடி எடுத்து வைத்துள்ள இந்த இஸ்ரேலியர்களின் வரலாற்றில் ஆப்ரஹாமால் தொடங்கப்பட்ட இந்தக் கொள்கைப் போராட்டம் காலச் சுழற்சியில் பல்வேறு பரிமானங்களைக் கொண்டதாக மாறி வருவதைக் காணலாம்.
ஆப்ரஹாமின் போராட்டமும், அவருடன் சேர்ந்து அவருடைய மனைவியர்களும் சேர்ந்து அனுபவித்த சிரமங்களும், தியாகங்களும் இன்றுவரை மாற்ற முடியாத வலுவான அடிப்படையை உருவாக்கிக் கொடுத்தது. அவருடைய சந்ததியினர் இன்றுவரைப் பெருகி பல்வேறு சமூகங்களாக மாறி இருந்தாலும், அன்றைக்கு அவர் மூலம் இறைவன் புத்துப்பித்து வைத்த ஆன்மீக அடித்தளங்கள் இன்றைக்கும் வலுவான ஒரு அடிப்படையாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆப்ரஹாமின் வாழ்க்கை முழுவதும் ஒரு மேன்மையான லட்சியத்தினை எட்ட அவர் நடத்திய போராட்டம் தெளிவாகவும், வன்முறைகள் இல்லாமலும், இன்னும் சொல்லப் போனால் குடும்ப வாழ்க்கையில் இடர்பாடுகள் ஏற்பட்டாலும் எதுவும் அவரது கட்டுப்பாட்டை மீறியதாக இருந்ததில்லை. வன்முறைகள் அவர் மீதுதான் கட்டவிழ்த்து விடப்பட்டதே தவிர்த்து அவர் வன்முறையை கையில் எடுத்ததாக இல்லை. அவருடைய மனைவியருள் பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அவரது மகன்களுக்கு அவர் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை வழி முறைகள் அவர்களை இருவேறு கிளைகளாக, இரு வேறு சமூகமாக அமைய வைத்தது. ஆனாலும், ஒன்றைவிட ஒன்றுக்கு அதிக முக்கியத்துவம், அதாவது ஒரு மகனைவிட இன்னொரு மகனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்ற அவர மனைவியர்களின் பேராசைகள், பிரிவினையை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது.
ஆப்ரஹாமிற்கு பிறகு இஸ்ஹாக்கின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அதில் சமூகத்தைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள் எதுவும் இல்லாமல் சுமூகமான முன்னேற்றமாக இருந்திருக்கிறது. அதனால்தான் என்னவோ திருக் குரான் இஸ்ஹாக்கைப் பற்றி அதிகமாக பேசவில்லை. ஆனால் இஸ்ஹாக்கின் மகன்களில் ஒருவருக்கு மட்டுமே, அதாவது இளைய மகனான ஜேக்கப்பிற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்ற அவரது மனைவியின் விருப்பம் குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஆப்ரஹாம் வாழ்க்கையில் இரு மனைவியரால் இப்படி ஓர் பிரச்சனை எழுந்தது. ஆனால் இஸ்ஹாக்கின் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் ஒரு படி முன்னேறி ஒரு தாய் தனது இரு மகன்களில் ஒருவருக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் வேண்டும் என்று ஒரே உள்ளத்தில் ஏற்படும் உறவு வேறுபாடுகளையும், வெருப்புகளின் வித்துக்களை சரித்திரமாக சொல்லுகின்றது.
இந்த நிகழ்வுகள் மனித மனங்களின் வளர்ச்சியையும், அதிகாரம், முக்கியத்துவம், சமூக கௌரவம், பொருளாதார வளர்ச்சி என்ற நிலைகளில் மனித உள்ளங்கள் எவ்வாறு பாதிக்கத் தொடங்குகின்றன என்பதை கோடிட்டு காட்டுகிறது. மனித உள்ளங்கள் எவ்வாறு ஏற்ற தாழ்வுகளை உருவாக்குபவையாகவும் தான் பெற்றெடுத்த பிள்ளைகளிலேயே வித்தியாசம் பார்க்கக் கூடியதாக மாறுகிறது என்பதை எடுத்துச் சொல்லும் வரலாறாக அமைகிறது.
பிறகு ஜேக்கப்பின் வாழ்க்கையும் கிட்டத்தட்ட இஸ்ஹாக்கின் வாழ்க்கையைப் போல் கொள்கை முன்னெற்றங்களில் அதிக பிரச்சனைகள் இல்லாமல் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், சிறிது சிறிதாக கடவுள் வழிபாடு பழுதுபடத் தொடங்கி கடவுளுடன் அம்மனிதன் நெருங்கியவனாக இருந்த காரணத்தால் அது ஒரு தனி மனித வழிபாடாக அல்லது அங்கீகாரமாக மாறத் தொடங்குகிறது. இறைவனுக்கு நெருங்கிய மனிதனாக ஒருவன் இருந்தால் அவன் இறைவனின் அங்கீகாரம் பெற்ற மனிதனாக, சமுதாயத்தில் அவனுக்கு புதிய ஒரு சமூக அந்தஸ்த்தை உருவாக்க காரணமாக இருக்கிறது என்பதையும் காட்டுகிறது. கொள்கைக்காக மனிதன் என்ற நிலை மாறி மனிதனுக்காக கொள்கைகள் என்று பரிமானம் அடைவதைக் காட்டுகிறது.
ஏமாற்றப்படுவதும் அல்லது ஏமாற்றுவதும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அவசியமே என்பது போல் ஜேக்கப்புடைய வாழ்வில் சில நிகழ்வுகள் அமைந்துள்ளன. அவர் தனது தந்தையை ஏமாற்றுவதில் தொடங்கி, தாய் மாமனிடத்தில் அவர் ஏமாறுவதுமாக இறுதியில் தனது பிள்ளைகள் ஜெருசலம் நகரில் (ஷெச்சம்), அச்சமூகத்தின் ஆண் மக்களை ஏமாற்றி அவர்களை தீர்த்துக் கட்டுவதாக சரித்திரம் செல்கிறது. அத்துடன் நில்லாமல் சகோதரர்களின் மத்தியில் ஜோசப்பிற்கு அதிக முக்கியத்துவம் அவர்களது தகப்பனால் வழங்கப்படுவதால் சகோதரர்கள் தனது சகோதரனையே, ஜோசப்பையே ஏமாற்றும் படலமாக முற்றுப் பெருகிறது.
இங்கும் மனித மனங்களின் கட்டுபாடற்ற அல்லது சகிப்புத் தன்மை இல்லாமையை எடுத்துச் சொல்லும் நிகழ்வுகளை வரலாற்றில் காணலாம். இந்த நான்கு தலைமுறையின் வரலாறு அவர்களின் குடும்பம் விரிவடையும் போதெல்லாம் ஒரு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு விரிவடைவதோடு மட்டும் நில்லாமல் பிரிவடையவும் செய்கின்றது என்பதையும் பார்க்கிறோம்.
ஒரு குடும்பத்தில், ஒரே கொள்கைக்காக வாழும் மக்களிடத்திலேயே இவ்வாறு தனிப்பட்ட மோதல்கள் ஏற்படுவதும், அதில் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று பிறர் மேல் வெருப்புக் கொள்வதும், அது காலப் போக்கில் தனிமனித முக்கியத்துவத்திற்காக கொள்கைகளை தியாகம் செய்யக் கூடியவதாகவும், ஒருவரை ஒருவர் சமூக படிக்கட்டுகளில் விஞ்சி நிற்க வேண்டும் என்ற சிநதனைகளை வளர்ப்பதாகவும் இந்த வரலாறு செல்வதைக் காணலாம்.
ஜோசப்பின் இளமைப் பருவம்
எகிப்திய மன்னன் பரோனின் அமைச்சவரையில் நிதி அமைச்சராக இருக்கும் ஒரு தனவந்தன் எகிப்து நாட்டிற்கு வந்த வர்த்தகக் கூட்டத்தில் அடிமையாக கொண்டுவரப்பட்ட ஜோசப்பை விலைக்கு வாங்கி தன் மனைவியிடம் அறிமுகப்படுத்துகிறார். அந்த அமைச்சருக்கு பொருட் செல்வம் நிறைய இருந்தது, ஆனால் குழந்தைச் செல்வம் இல்லாதிருந்தார். ஜோசப் அப்போது இளமைப் பருவத்தை நெருங்கிக் கொண்டிருந்த ஒரு அழகான, பார்ப்பவர்களை கவரும் வண்ணம் இருந்த ஒரு வாலிபன். பார்க்கும் எந்த பெண்ணும் அவரை அடைய வேண்டும் என்று ஆவல் கொள்ள வைக்கும் அழகிய இளமை பருவத்தில் இருந்தார் ஜோசப். இன்னும் சொல்லப் போனால் அந்நகரில் அவரைப் போன்ற தோற்றமும், உடலமைப்பும், இன்னும் ஒளி மிகுந்த பார்வையும், முக அமைப்பும் உள்ள இளைஞர் வேறு யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வசீகரமானவராக இருந்தார்.
ஜோசப்பின் தோற்றம் மட்டும் ஆவல் கொள்ள வைக்கும் அழகு நிறைந்ததாக இல்லை. அவரது பேச்சு, நடத்தை, பெருந்தன்மை, செயல்கள் எல்லாம் பிறரை கவரக்கூடியதாக இருந்தது. அவரது கொள்கைப் பிடிப்பு, இறை பக்தி, இறைப் பணி, மக்களை ஓரிறைப் பக்கம் அழைக்கும் அழகிய முறை, அவருடைய கல்வி, சிந்தனை, அவருக்கு இறைவன் வழங்கிய மறைவானவைகளை அறிந்துக் கொள்ளும் அறிவு எல்லாம் அவரை அச்சமூகத்தில் ஒரு சிறந்தவராக, வித்திசாசமானவராக இருக்க வைத்தது. கனவுகளுக்கு சரியான காரணங்களும், அதற்கான விளக்கங்களும் சொல்லக்கூடிய விசித்திரமான அறிவும் ஆற்றலும் அவருக்கு இருந்தது.
தன்னை இகழ்ந்தவர்களையும், இன்னல் செய்தவர்களையும் மன்னிக்கும் குணமும், மறக்கும் தன்மையும் அவரிடம் நிறையவே இருந்தது. தனது ஒவ்வொரு பிரச்சனையிலும் தன்னை இறைவன் கைவிடமாட்டான் என்ற அசாத்திய நம்பிக்கை அவரை சிறுவயது முதல் தனி ஒரு மனிதனாக போராட வைத்தது. தனது சகோதரர்கள் தன்னை ஏமாற்றி அழைத்துச் சென்று காட்டில் கிணற்றில் தள்ளிவிட்ட போதும் இறைவனே என்னைக் காப்பாற்ற போதுமானவன் என்ற நம்பிக்கை அவரை அப்படிப்பட்ட இன்னல்களிலிருந்தும் கைதூக்கிவிட போதுமானதாக இருந்தது.
தனது வேலை நேரம் போக அவர் இறைவனின் சிந்தனையிலும், இறைப் போதனையிலும் தன் வாழ்க்கையைக் கழித்து வந்தார்.
அவருடைய இளமைப் பருவமே அவருக்கு ஓர் சோதனையாக வந்து சேர்ந்தது. அவர் அடிமையாக வேலை செய்யும் அவரை விலைக்கு வாங்கிய அமைச்சரின் இல்லத்திலேயே அவருக்கு பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்தது.
அவருடைய அழகின் வளர்ச்சியையும், பழகும் பக்குவத்தையும் தினமும் கண்ணுற்று வந்த அமைச்சரின் மனைவியின் மூலமாகவே அவர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். ஜோசப்புடன் உறவு கொள்ள வேண்டும் என்று முதலாளியின் மனைவி விரும்பலானார். இதை புரிந்துக் கொண்ட ஜோசப் செய்வதறியாது தவித்தார். தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பது புரியாமல் இருந்தார். வீட்டை விட்டு ஓடிவிட முடியாது. அடிமை என்ற காரணத்தால் எங்கு சென்றாலும் யாரும் உதவ மாட்டார்கள். யாருக்கு இவர் அடிமையோ அவருக்கு மட்டுமே இவர் சொந்தம். அந்த அடிமையை அந்த உரிமையாளர் கொலை செய்யக்கூட முடியும். அதே நேரம் அடிமையுடன் உறவு கொள்ள உரிமை உள்ளவர்கள் விரும்பினால் அதைத் தடுக்கவும் முடியாது, அதை மறுக்க உரிமைகூட ஒரு அடிமைக்குக் கிடையாது. வேறு யாரிடமும் இதைச் சொன்னால் அடிமைக்கு ஏது உரிமை என்று யாரும் காது கொடுத்துக் கூட கேட்க மட்டார்கள்.
ஜோசப் இப்போது வேண்டுமானல் ஒரு அடிமையாக இருக்கலாம். ஆனால் அவர் ஆப்ரஹாமின் வழிவந்த ஒரு உயர்ந்த குடும்பத்தின் வாரிசு மற்றும் இறைத்தூதர். தான் ஒரு அடிமையாக இருந்தாலும் எதிர்காலத்தில் ஒரு நல்ல மாற்றம் வரும், தன்னை யார் என்று இந்த சமுதாயம் உணர்ந்துக் கொள்ளும் என்பதை நன்றாக அறிந்திருந்தார். இறைவனின் தூதராக இருப்பவர்களுக்கு சோதனைகள் எப்போதும் குறைவில்லாமல் வந்து கொண்டுதான் இருக்கும் என்பதை அறிந்து, அதை வெற்றிக் கொள்ள வேண்டும் என்ற பக்குவம் நிறைந்தவராகவும் இருந்தார். அழகும், செல்வமும் உள்ள பெண்ணாக இருந்து அழைத்தாலும், தவறான உறவு முறைகள் எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது, அது இறைவனின் பார்வையில் மிகப் பெரும் குற்றம் என்பதை நன்கு அறிந்திருந்தார்.
பிரச்சனைக்கு தீர்வு தெரியாமல் தவித்தார் ஜோசப். அமைச்சரின் மனைவியோ சரியான நேரத்திற்காக காத்திருந்தார். அப்படி ஓர் நாளும் வந்தது. அமைச்சர் வெளியூர் சென்ற ஒரு நாளில் அமைச்சரின் மனைவி இருக்கின்ற ஆடையிலேயே விலையுயர்ந்த ஆடையை அணிந்து தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டு இரவிற்கு தயாரானார். ஜோசப் செய்வதறியாது இறைவனிடம் பிரார்த்தித்தவராக தனிமையில் அமர்ந்திருந்தார். இரவு நெருங்க நெருங்க, அமைச்சரின் மனைவிக்கு ஆவல் அதிகமாகியது, ஜோசப்பிற்கு பயம் அதிகமாகிப் போனது. அமைச்சருடைய மனைவியிடமிருந்து அழைப்பும் வந்தது.
(தொடரும்)