Thursday, December 16, 2010

தேர்தல் கூத்து - கும்மாளம் - கொண்டாட்டம்

தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவிட்டது. வாக்காளர் பெருமக்களின் மரியாதைக்குரிய நேரம் இது. அரசியலை வியாபாரமாக்கிய முன்னால், இன்னால் மற்றும் பின்னால் வர இருக்கின்ற தமிழகத் தலைவலிகளின் கனவு மெய்ப்பட, மரியாதைக்குரிய திருவாளர் வாக்காளர்களை அடையாளம் கண்டுக்கொள்ளப்படும் நேரம் இது. சாதித்தாக ஆளும் கட்சியும், சாதிக்கப் போவதாக எதிர்கட்சிகளும், சகித்துக் கொண்டதாக துக்கடா கட்சிகளும் ஒன்றுகூடி மக்களை சோதிக்கும் நேரம் தொடங்கிவிட்டது.



இவ்வறிய சந்தர்ப்பத்தில் என் சிந்தனைகளையும், அரசியல் அலசல்களையும் அவ்வப்போது எனது மனக்குமுறல்களையும் இந்த வலைப்பூவில் கொட்டித் தீர்க்கலாம் என்று முடிவுக்கு வந்துள்ளேன். நான் தற்கால அரசியலையும், அதை நடத்திச் செல்லும் பெரியவர்களையும் விமர்சித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. விமர்சிக்க ஒன்றுமில்லை என்றல்ல. எனக்கு நேரமில்லாமல் போனதால். இப்போது மட்டும் நேரம் வந்துவிட்டதா என்று கேட்கலாம், இல்லைதான், ஆனாலும் வரவிருக்கும் தேர்தலில் யாராவது ஒன்றிரண்டு பேர் எனது அலசல்களை படித்துவிட்டு தங்களது சிந்தனைகளில் சில மாற்றங்களை கொண்டுவரலாம். அதனால் வாக்களிப்பதில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்ற
காரணத்தினால் எழுதத் தொடங்கியுள்ளேன். என்ன கிழிக்கப்போகிறாய் என்று கேட்கலாம். நல்ல கேள்விதான். ஒன்றுமே கிழிக்க முடியாது என்று ஒதுங்கிக் கிடப்பதைவிட எதையாவது கிழிக்கலாம் என்று நினைப்பது மிகவும் மேலானது. வெறும் நினைப்பைவிட முயற்சிப்பது மேலானது. முயற்சி எப்போதாவது, எங்கேயாவது ஏதேனும் சில பலன்களை ஏற்படுத்தலாம். எனவேதான் இந்த கிழிக்கும் முயற்சியின் முதல் பதிவு இது.



அது மட்டுமல்ல, இந்திய ஜனநாயக அரசியலில் பொதுவாக ஐந்தாண்டுக்கு ஒருமுறைதான் சூரிய உதயம். இரவின் நீளம் வருடக்கணக்கிலும் பகலின் அளவு ஒருசில மாதங்கள்தான் உள்ள நிலையில் வருடக்கணக்கில் தூங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிவிட்டது பொதுஜனம். பாவம் பகலின் தன்மையை புரிந்துக் கொள்வதற்குள் கையில் மையேந்தி கடமையை முடித்துவிட்டு மீண்டும் உறங்க சென்றுவிடுவார் இந்த பொதுஜனம். எனவேதான் இந்த விழித்திருக்கும் சந்தர்ப்பத்தில் எதையாவது கிழிக்கலாம் என்று முடிவுக்கு வந்துள்ளேன்.



என்னைப் பொருத்தவரை இந்தியாவில் வளர்ச்சி என்பது, அது எந்தவிதமான வளர்ச்சியாக இருந்தாலும், அரசியல் மற்றும் அதிகாரப் பெரியவர்களின் சிறப்பு வாய்ந்த திட்டங்களினாலும் அவைகளின் செயல்பாடுகளினால் மட்டும் கிடையாது. இந்தியாவின் வளரச்சி ஓர் இயற்கையான வளர்ச்சி. இயற்கை யாருக்காவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை. இயற்கை தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது. அதில் அழிவுகளும் உண்டு, ஆக்கங்களும் உண்டு. இயற்கை வளர்ச்சிக்கு உதாரணமாக கர்நாடக மற்றும் தமிழகத்தின் விவசாயத்தை சொல்லலாம். சுதந்திரத்திற்கு முன்னும், கிடைத்த சில ஆண்டுகள் பின்னும் தமிழகத்தின் விவசாயம் இந்தியாவில் முதன்மையான ஒன்றாக இருந்தது. இயற்கை நீர்வளத்தை ஆதாரமாக கொண்டு செயல்படும் தமிழக விவசாயம் கர்நாடகாவில் கட்டப்பட்ட அணைகளின் மூலம் நசியத் தொடங்கியது. அதே இயற்கை வளம் கர்நாடகாவில் தரிசுகளாக கிடந்த பெரும்பகுதி நிலங்களை வளம் கொழிக்கும் நிலமாக மாற்றிவிட்டது. பகரமாக தமிழக நிலங்கள் தரிசுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. இயற்கையை பயன்படுத்தி கர்நாடாக மாநிலம் ஆக்கம் பெறத் தொடங்கிவிடது, தமிழக மாநிலம் அழிவை சந்திக்கத் தொடங்கிவிட்டது. இவ்வாறு எத்தனையோ திட்டங்கள் இயற்கையின் உந்துதலில் ஏற்பட்ட மாற்றங்கள்தான்.



மனிதர்களும் இயற்கையின் ஓர் அங்கமே! இயற்கையை புரிந்துக் கொள்ளும் ஒரு புதிரானப் படைப்பு. இயற்கையின் மாற்றங்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்ட அரிய படைப்பு. இயற்கையின் தன்மையைப் புரிந்துக் கொண்டு அந்த வளர்ச்சி அதிகமடைய அவ்வப்போது எதாவது ஒன்றிரண்டு அரசியல் நல்லவர்கள் சில நல்ல திட்டங்களையும் அல்லது கொள்கைகளையும் செயல்படுத்திவிட்டு செல்வார்கள். அதன் தாக்கம் பல ஆண்டுகள் நீடிக்கும், குறிப்பாக பசுமைப் புரட்சி, வெள்ளைப் புரட்சி (பால்), கணினி புரட்சி, தொலைத்தகவல் புரட்சி என்று இதுவரை நாம் பார்த்த புரட்சிகள் அனைத்திலும், அடிப்படையாக இருக்கும் இயற்கை மாற்றத்தையும், அதன் உந்துதலையும் பார்க்க முடியும். இதற்கு வித்திட்டவர்களில் பலரின் பெயர்கள் கூட நமக்கு மறந்து போயிருக்கலாம், காரணம் அவர்கள் தங்களின் நலன்களுக்காக எதையும் செய்யவில்லை, தங்களின் அறிவு மற்றும் உலக அனுபவம், இந்தியாவின் தேவை, உலக அரங்கில் நமது பங்கு என்று பல பரிமானங்களை அலசிப்பார்த்து செயலாற்றியவர்கள். மற்றவர்கள் எல்லாம் அந்த வெற்றிகளில், வளர்ச்சியில் குளிர் காயும் புத்திசாலிகள். சரி இந்த இயற்கை உந்துதலினால் ஏற்படும் வளர்ச்சியும் மாற்றங்களும் போதுமா என்றால், நிச்சயமாகப் போதாது. இயற்கை வளர்ச்சியுடன் மனித மற்றும் பொருள் வளங்களை ஒன்று சேர்த்து உந்துதலை அதிகப்படுத்தினால் நாம் வேகமாக முன்னேற முடியும். அப்படி ஒன்று சேர்க்கும் எந்த முயற்சியையும் தற்போது இருக்கும் பெரும்பாலான அரசியல்வாதிகளால் செய்ய இயலாது. காரணம், அவர்களின் சிந்தனைகளில் பழமையும், சுயநலமும், தனது சுய பாதுகாப்பு மட்டுமே ஆக்கிமிரத்திருப்பதால், அவர்களால் அந்த வட்டத்தை சுற்றி வெளிவருவது என்பது சுலபமல்ல.



எனவேதான், வரவிருக்கும் தமிழகத் தேர்தலலை சந்தர்ப்பமாக வைத்து எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் ஆவலில் இதை எழுதுகிறேன். எனது கட்டுரையில் சமகால நிலை அதன் பிண்ணனிகள், தேர்தல் கூட்டணி அமைப்புகள், அதற்கான பிண்ணனிகள், தேர்தலில் முன் வைக்கப்படும் பிரச்சனைகள், திட்டங்கள், தேர்தலில் போட்டியிடுபவர்கள், தமிழக்த்தின் எதிர்கலாப் பிரச்சனைகள், அதை சந்திக்கும் ஆற்றல், நமது விருப்பம் என்று இவை அனைத்தையும் முன்னிறுத்தி எழுத இருக்கிறேன். என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு செய்வது அவரவர் தகுதிக்கும், விருப்பத்திற்கும் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் என்ன செய்தால் மாற்றங்களை கொண்டுவரலாம் என்று ஒருசில கருத்துக்களையும் ஆய்ந்து வெளிப்படுத்த இருக்கின்றேன்.



இந்தக் கட்டுரைத் தொடர் முழுக்க முழுக்க எனது ஆய்வாக இருந்தாலும், இந்த ஆய்வில் நான் பலரை சந்தித்தும், பேசியும், தொடர்பு கொண்டும் அறிந்த கருத்துக்கள் நிறைய இருக்கும் பட்சத்தில் இதைப் படிப்பதன் மூலம் உங்களின் சிந்தனைகளை ஆக்கப் பூர்வமான வழியில் கொண்டு செல்ல இது பயன்படுமானால் அதுவே போதுமானது.



இந்தியாவை புரட்சியின் மூலம் மாற்ற முடியாது. அரசியல் கலகம், புரட்சி என்பதெல்லாம் நமது வாழ்க்கை, கலாச்சார மற்றும் பண்பாடுகளில் கிடையாது, மேலும் நமது இரத்தத்திலும் அப்படிப்பட்ட அணுக்கள் இல்லை. இந்தியாவில் மாற்றமும் வளர்ச்சியும் பரிணாம வளர்ச்சியை அடிப்படையக் கொண்டுதான் அடைய முடியும். இப்பரிணாம வளர்ச்சியை ஒழுங்குப்படுத்தி செல்ல சில நல்லவர்கள் அரசியல் அதிகாரத்தில் அமர வேண்டும். ஆகவேதான் இந்த முயற்சி. இது உடனே நடக்கக் கூடியதல்ல, ஆனால் நடக்க முடியாததும் அல்ல. உலக வரலாற்றிலும் சரி, இந்திய வரலாற்றிலும் சரி மாற்றங்களை கொண்டு வந்தவர்களும், வருபவர்களும் 'மைனாரிட்டிகளே'. நான் சொல்லும் மைனாரிட்டி இன, மத, ஜாதி அடிப்படையில் அல்ல. 'மாற்றம்' வேண்டுமென்று சிந்திக்கும், விரும்பும், உழைக்கும் சுயநலமற்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை சொல்கின்றேன். அவர்களில் நானும் ஒருவன். நீங்களுமா?



(தொடரும்)