Monday, June 13, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 1

யூத குலத்தின் தொடக்கம்

ஊரெல்லாம் திருவிழா கோலம். ஆண்களும் பெண்களும் ஆடிப்பாடி கொண்டாட்டமாய் தெருவெங்கும் சுற்றித் திரிந்தார்கள். சிறுவர்கள், மரக்கட்டைகளில் செதுக்கிய பொம்மைகளுக்கு கருப்பு, மஞ்சள், சிவப்பு, பச்சை என்ற வர்ணங்களை பூசி மெழுகி கைகளில் வைத்துக் கொண்டு ஆடிப்பாடி தெருக்களில் வலம் வந்துக் கொண்டிருந்தார்கள். குடில்களின் வாசலில் வைத்திருந்த பாறைக் கற்களுக்கு அவரவர் விருப்பம்போல் அதற்கு வர்ணங்கள் அடித்து தத்ததமது வழிபாட்டு கடவுள்களை காட்சியாக வைத்து மகிழ்ந்துக் கொண்டிருந்தார்கள். அதைச் சுற்றி பெரியவர்களும், முதியவர்களுமாக நின்று கொண்டு தமது புரதான கலாச்சாரப் பெருமைகளைச் சொல்லியும் அந்த பாறைகளை (கற்களை) அவர்கள் எவ்வாறு எங்கிருந்து கொண்டு வந்தார்கள், அவைகளை எவரெவர் ஆசீர்வதித்தார்கள் என்றெல்லாம் அதன் சரித்திரங்களை இளைஞர்களுக்கு விவரித்துக் கொண்டிருந்தார்கள்.

தேரா என்ற பெயர் கொண்ட நடுத்தர வயது மனிதர் ஒருவர், மேனியில் சுற்றிய துணியை மண்ணில் விழாதவாறு இடது கையில் பிடித்தவாறு யாரையோ தேடியவராய் நடந்து வந்துக் கொண்டிருந்தார்.

'அதோ அஜர் வந்துக் கொண்டிருக்கிறாரே' என்று ஒரு முதியவர் வந்து கொண்டிருக்கும் தேராவைப் பார்த்துச் சொல்ல தெருவின் மத்தியில் ஒரு பாறையைச் சுற்றி நின்ற அனைவரும் தேராவைப் பார்த்தவாறு மண்டியிட்டு மரியாதைச் செய்தார்கள்.

தேரா அந்த மக்கள் வாழ் பகுதியில் பெரும் மரியாதைக்குரிய புரோகிதர்களில் ஒருவராக இருந்தார். அப்பகுதியில் இருக்கும் கடவுள்கள் அனைவரையும் பிரதிஷ்டை செய்வது முதல் அவ்வப்போது அந்த கடவுள்களுக்கு செய்யக்கூடிய பெரிய விசெஷங்கள் அனைத்தையும் செய்யக்கூடியவர்களில் அவரும் ஒருவர். அவரது பெயர் தேரா என்று இருந்தாலும் அவரை அவர் அதிகம் விரும்பக்கூடிய 'அஜர்' என்னும் கடவுளின் பெயர் கொண்டுதான் அப்பகுதி மக்கள் அழைப்பது வழக்கம். (1)

தேரா, மண்டியிட்டு இருந்த அவர்களின் மரியாதையை கையசைத்து ஏற்றுக் கொண்டவுடன் மண்டியிட்டவர்கள் அனைவரும் எழுந்து அவர் அருகில் சென்று அவரின் கையை ஒருவர் பின் ஒருவராக பிடித்து மணிக்கட்டில் முத்தம் பதித்தார்கள்.

'எங்கே இந்த வழியாக.. திருவிழாக் கூடும் இடத்திற்கு மக்கள் புறப்பட்டுவிட்டார்கள். நீங்கள் யாரையோ தேடுவதைப் போல் தெரிகிறதே' என்று ஒரு பெரியவர் தயங்கி தயங்கி மரியாதையுடன் நிலத்தை நோக்கியவாறு கேட்டார்.

சற்று நேரம் அங்கிருந்தவர்களின் முகங்களை நோக்கிவிட்டு 'எனது மகன் ஆப்ரஹாம் (2) எங்கு சென்றார் என்று தெரியவில்லை அதுதான் தேடிக்கொண்டு வருகிறேன்.' என்று சொல்லிவிட்டு தான் புறப்படுகிறேன் என்று கைகளால் அவர்களுக்கு மரியாதை செய்துவிட்டு நகர்ந்தார்.

'கொஞ்ச நாட்களாகவே அஜரை கவனீத்தீர்களா, மன நிம்மதியில்லாமல் இருக்கிறார்' என்று கூட்டத்திலிருந்த ஒரு மனிதர் சொல்ல இன்னொரு இளைஞன் 'ஆம்.. ஆப்ரஹாம்தான் அதற்கு காரணம். நாம் செய்கின்ற கடவுள் சடங்குகள் எதையும் அவர் செய்வதுமில்லை.. அதுமட்டுமல்லாமல்.. நாம் கடவுள் என்று வணங்குகின்ற சிலைகளை அவர் வணங்கவும் மறுக்கிறார்'

இவர்களின் இந்த உரையாடல் பாபிலோனா என்ற இந்தப் பகுதியில் இப்போதெல்லாம் அடிக்கடி பேசப்படுகிற மிகப்பெரும் விஷயம். காரணம் தேராவும் அவர்களது முன்னோர்களும் பாபிலோனா பகுதியில் செல்வாக்கு வாயந்த ஒரு பெரும் குடும்பம். அதுமட்டுமல்லாமல் வழிவழியாக பாதுகாக்கப்பட்டு வருகிற கடவுட் சடங்குகள், புராதான பழக்க வழக்கங்கள் அனைத்திற்கும் இந்த குடும்பமே பாபிலோனா மக்களுக்கு எடுத்துக்காட்டுகள், மற்றும் வழிகாட்டிகள்.

ஒரு முறை ஆப்ரஹாம் தனது தந்தையைப் பார்த்து.. 'நீங்கள் ஏன் இந்த கற்சிலைகளை வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த சிலைகள் எதுவும் உங்களைப் பார்க்கவோ அல்லது நீங்கள் சொல்வதை கேட்கவோ சக்தியற்றவை, எனக்கு இது தொடர்பான சில ஞானம் கிடைத்துள்ளது.. நீங்கள் நான் சொல்வதை கேளுங்கள் தந்தையே' (3) என்று தேரவை அழைக்க அவர் பொல்லாத கோபம் கொண்டு மகனிடம் 'நீ என்னை விட்டு சில காலம் போய்விடு, இல்லையென்றால் நான் உன்னை கல்லால் அடித்துக் கொல்வேன்' (4) என்று சத்தமிட்டார்.

ஆப்ரஹாம் தனது தந்தையிடம் 'கடவுள் உங்களை மன்னிக்க நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். உங்கள் மீது சாந்தியும் சமதானமும் நிலவட்டும்' (5) என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்

இந்த தந்தை மகன் உரையாடல் இப்போதெல்லாம் அதிகமாக கோபத்திலும் மன உளைச்சலிலும் சென்று முடிய இவர்களின் இந்த நிலை பாபிலோனா பகுதியில் எல்லோருக்கும் ஆச்சர்யத்தையும் ஏதோ ஒரு பெரும் பிரச்சனையில் இது சென்று முடியப்போவதாக பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். அத்தோடு நில்லாமல், தேராவின் பேரப் பிள்ளையான (ஹரனின் மைந்தன்) லூத் (6) ஆப்ரஹாமுடன் சேர்ந்துக் கொள்ளவே தேரவிற்கு சொல்லமுடியாத வேதனை. மகனும் லூத்தும் ஒரு பக்கம், தேராவின் சமூக அந்தஸ்தும், தான் இத்தனை காலமாக மதித்தும் வணங்கியும் வந்த இறைக் கொள்கையும் இன்னொரு பக்கமுமாக பெரும் கவலைக்குள்ளனார்.

ஆப்ரஹாம் தனது தந்தையை மட்டும் மாறச்சொல்லவில்லை. பாபிலோனாவில் வசிக்கும் அத்தனை மக்களையும் அவர்களின் கடவுட்கொள்கையிலிருந்து மாறுமாறு அழைக்கவே தேரவிற்கு தினம் தினம் பெரும் பிரச்சனையாக இருந்தது. ஆப்ரஹாம் மக்களிடம் தனது ஞானத்தை எடுத்து வைத்து, கற்சிலைகளை வணங்காதீர்கள் என்ற பிரச்சாரம் பாபிலோனாவில் பெரும் பூகம்பத்தை கிளப்பிவிட இந்த வேலையில்தான் இந்த வருடாந்திர திருவிழாக் காலம் வந்தது. மக்கள் எல்லோரும் ஊருக்கு வெளியில் இருக்கும் திடலில் ஒன்று கூடி பூஜைகளும், பலிகளும், மதுப்பானைகளுமாக இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் கடவுளை வணங்கமுடியுமோ அவ்வாறெல்லாம் வழிபட ஒன்று கூடலானார்கள்.

ஒருவழியாக மகனைத் தேடிப்பிடித்து ஆப்ரஹாம் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தார் தேரா.

அங்கே ஆப்ரஹாமை சூழ்ந்தவாறு மக்கள் கூட்டம் அவரிடம் தர்க்கம் செய்து கொண்டிருந்தார்கள்.

'ஓ மக்களே நீங்கள் எதை வணங்குகிறீர்கள்' - ஆப்ரஹாம்

'நாங்கள் இந்த சிலைகளை பக்தியுடன் வணங்கி வருகிறோம்' என்றனர் மக்கள்.

'அப்படியானல், நீங்கள் அழைக்கும் போது அது உங்களின் வார்த்தைகளை கேட்க சக்தி பெற்றதா? அல்லது அது உங்களுக்கு ஏதேனும் நன்மைகளோ அல்லது தீமைகளோ செய்ய சக்தி பெற்றதா' - ஆப்ரஹாம்

'இல்லை ஆப்ரஹாம். அந்த சிலைகளுக்கு அப்படி எந்த சக்தியும் இல்லை. ஆனால் எங்களின் மூதாதையர்களும் அந்த சிலைகளைத்தானே வணங்கினார்கள்?' மக்கள் பதிலளித்தார்கள்.

'அப்படியா.. தெரிந்துக் கொள்ளுங்கள் நீங்களும் உங்களின் மூதாதையர்களும் எதை வணங்கினீர்கள் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் வணங்கக் கூடிய இந்த கற்சிலைகள் எனக்கு ஒன்றுமில்லாதவைகள், எதிரிகள் (7)' என்று ஆப்ரஹாம் அம்மக்களின் அறியாமையை விளக்கிக் கொண்டிருந்தார்.

மக்கள் கூட்டம் ஆப்ரஹாமின் கூற்றில் குழப்பமடைந்தவர்களாய் சிலரும், பலர் ஆப்ரஹாமை நிந்தித்தும் கலைந்து சென்றனர்.

தேரா ஆப்ரஹாமின் அருகில் நெருங்கி வரவே. ஆப்ரஹாம் தந்தையில் அருகில் வேகமாக வந்து அவரின் வலது கையை தூக்கி முத்தமிட்டவராய் மரியாதை செலுத்தினார்.

சிறிது நேர அமைதிக்குப் பின் ஆப்ரஹாம் மகனிடம் பேச ஆரம்பித்தார். பேச்சு வழக்கம் போலவே இறை வணக்க கொள்கைக்குள் செல்லவே.. தேரா சற்று நிதானத்துடன்..

'ஆப்ரஹாம்.. வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் இந்த திருவிழாவிற்கு நீ வந்து கலந்து கொள்ள வேண்டும்' என்று அழைத்தார்.

ஆப்ரஹாம் சற்று நேரம் அமைதியாய் இருந்துவிட்டு வானத்தின் நட்சத்திரங்களைப் பார்த்தவாறு,

'தந்தையே.. நான் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறேன். நீங்கள் சென்று வாருங்கள்' (8) என்று சொல்லியவாறு வேறு பக்கம் பார்வைகளை திருப்பிக் கொண்டார்.

தேரா கனத்த மனதுடன் நடக்கத் தொடங்கினார்.

நகரம் முழுவதும் வெறிச்சோடிப் போனது. அங்கங்கே ஒரு சில மிருகங்கள் மட்டும் உலாவிக் கொண்டிருக்க மக்கள் கூட்டம் முழுவதும் ஊருக்கு வெளியே திருவிழா வைபோகத்தில் இருந்தனர்.

ஆப்ரஹாம்.. கையில் ஒரு கோடலியை எடுத்துக் கொண்டு, நகரத்தின் நடுவில் இருக்கும் பெரிய கோவிலை நோக்கி நடந்துக் கொண்டிருந்தார். அவரின் முகத்தில் ஒருவிதமான உற்சாகமும், ஒரு தெளிவான சிந்தனையும் இருக்க அவரின் தோளில் இருந்த கோடாலி நிலவின் வெளிச்சத்தில் பளபளவென மின்னிக் கொண்டிருந்தது.

(தொடரும்)

1. தேரா என்பது பைபிள் மூலமாக அறியப்படுகிற பெயர். அஜர் என்பது திருக் குரான் மூலமாக அறியப்படுகிற பெயர். அஜர் எனும் புனைப்பெயர் அவர் அதிகமாக விரும்பும் கடவுளின் பெயரால் அழைக்கப்படுவதாக இப்ன் ஜரீர் எனும் வரலாற்று ஆசிரியரால் அறியப்படுகிறது (Stories of the Prophets authored by Ibn Kathir, Page 125)

2. ஆப்ரஹாம் என்று பைபிளிலும், பழைய ஏற்பாட்டிலும் அழைக்கப்படுபவர், திருக் குரானில் இப்ராஹீம் என்று அழைக்கப்படுகிறார். இவர் நபியாக அங்கீகரிப்பட்டவுடன் நடக்கும் நிகழ்ச்சிகளே இங்கு மேலே சொல்லப்படுபவைகள்.

3. திருக் குரான் (19:41-45)

4 & 5. திருக் குரான் (19:46-48)

6. இறைத்தூதர் லூத் (ஆப்ரஹாமின் சகோதரன் மகன்)

7. திருக் குரான் (26: 69-83)

8. திருக் குரான் (37: 88-89)

No comments: