Saturday, April 02, 2005

அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 3

ஆங்கிலத்தில் சொல்வார்கள், 'When the chips are down, you have to show the grit' இதைத்தான் தற்போது அமேரிக்கா செய்து கொண்டிருக்கிறது. தனது பொருளாதாரம் ஒரு கண்ணி வெடியின் மீது நிற்பது போல் அமேரிக்கா உணர்கிறது. அமேரிக்காவின் வீழ்ச்சி அதனுடைய பொருளாதார வீழ்ச்சியை பொறுத்தே இருக்கிறது என்பதை அமேரிக்காவின்ஆளும் வர்க்கம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. இன்னும் நான்கைந்து வருடங்களில் அமேரிக்காவின் பொருளாதாரம் சரிவை சந்திக்கும் அபாயம் வெகுவாகவே இருப்பதால், 21ம் நூற்றாண்டு அமேரிக்காவின் கையை விட்டு போகும் வாய்ப்பு நிறையவே உள்ளது.

அமேரிக்காவின் பொருளாதாரத்தை தொடர்ந்து நம்பலாமா? அமேரிக்காவின் பொருளாதார பலம் தொடர்ந்து குறைவதால் டாலரின் கையிருப்பை மாற்றலாமா? என்றெல்லாம் உலக நாடுகள் தொடர்ந்து சிந்தித்து வருவதும் டாலரின் கையிருப்பை குறைப்பதும் இப்போது தொடங்கிவிட்டன.

இச்சூழலில்தான் 1999ல் ஈரோ அறிமுகப் படுத்தப்பட்டு டாலரைப் போல் அல்லாமல் தங்கத்திற்க்கு எதிராக 15% மதிப்புடன் புழக்கத்திற்க்கு கொண்டு வரப்பட்டது. முதலில் ஈரோ ஒரு பலவீனமான கரன்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த நான்கு வருடமாக ஈரோ டாலருக்கு எதிராக 25% தனது மதிப்பை உயர்த்தி, தன்னை ஒரு மாற்று கரன்சியாக, குறிப்பாக டாலருக்கு எதிராக தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ளது.

எப்போதுமே மார்க்கெட்டில் ஒரு பொருளை எதிர்த்து இன்னொரு பொருளை புழங்கவிட வேண்டுமென்றால் அல்லது புரோமோட் செய்ய வேண்டுமென்றால் அறிமுகப்படுத்தப்படும் அல்லது போட்டியிடும் பொருளை குறைந்தது இரண்டு மூன்று வருடத்திற்க்கு எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்று முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டு செயல் படுத்தப்படும். அவ்வப்போது தேவைப்படும் பட்சத்தில் அதனுடைய செயல் திட்டத்தில் ஒருசில மாற்றங்கள் உண்டாக்கப்டுமே தவிர்த்து அதனுடைய 'marketing strategy' மாற்றப்பட மாட்டாது. அந்த வகையில்தான் ஈரோ அமேரிக்க டாலருக்கு எதிராக நிறுத்தப்பட்டு உலக நாடுகளின் வர்த்தகத்தில் தனக்கென்று ஒரு பங்கை உருவாக்கிக் கொண்டுவிட்டது.

2002 வருடத்தில் உலக நாடுகளின் டாலர் மொத்தக் கையிருப்பு தோராயமாக 68% ஆக இருந்தது. அதே வருடம் உலகிலேயே ஜப்பானுக்கு அடுத்தப்படியாக கிட்டதட்ட 200 பில்லியன் டாலர்கள் கையிருப்பு வைத்துள்ள சீனா தனது கையிருப்பில் கனிசமான பங்கை ஈரோவிற்கு மாற்றுவதாக அறிவித்தது. (சீனாவின் forex reserve ஒரு அரசாங்க ரகசியமாக கையாளப்படுகிறது). ஈரோவின் மத்திய வங்கியான BNP Paribas அறிக்கையின்படி சீனா 80% வைத்திருந்த டாலரின் கையிருப்பை 50% குறைத்ததாக தெரிகிறது.

2001 லிருந்து 2003 வரை கனடா தனது டாலரின் கையிருப்பை 75% லிருந்து 55% குறைத்து ஈரோவின் கையிருப்பை 23% லிருந்து 42% உயர்த்தியுள்ளது.

ஜனவர்¢ 2003ல் ரஷ்யாவின் மத்திய வங்கி ஈரோ கையிருப்பை 5% லிருந்து 10% உயர்த்தி டாலரின் கையிருப்பை 75% குறைத்தது. ரஷ்யாவின் இறக்குமதியில் 42% ஐரோப்பிய நாடுகளிலிருந்துதான் செய்யப்படுகிறது என்பதும் கவனிக்க வேண்டியதே.

2002ல் தைவான், ஹாங்காங், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், 2003ல் இந்தோனேஷியா 'axis of evil' என்று அமேரிக்காவால் அடையாளப்படுதப்பட்ட நாடுகளில் ஒன்றான வட கொரியா போன்ற நாடுகள் டாலரை குறைத்து ஈரோவை அதிகப் படுத்த தொடங்கின. இப்படி உலக நாடுகளின் செயல்பாடுகளுக்கு காரணம் ஏதோ அமேரிக்காவை பிடிக்காமல் அல்ல. இந்த நாடுகளின் இறக்குமதிகளின் பெருமடங்கு ஐரோப்பியா நாடுகளிலிருந்து செய்ய வேண்டிய அவசியமும் மற்றும் டாலரைப் போல் அல்லாமல் ஈரோ தங்கத்திற்க்கு எதிராக அதிலும் 15% மதிப்புடன் பொறுத்தப்பட்டதே. அதே நேரம் ஈரோவின் நம்பகத்தன்மை டாலரைவிட அதிகமாக இருப்பதற்க்கு காரணம் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் எதுவும் அமேரிக்காப் போன்று பற்றக்குறைகள் அதிகமில்லாமல் இருப்பது இன்னுமொரு முக்கிய காரணம்.

தற்போது உலக பொருளாதாரத்தில் என்னவெல்லாம் வாங்க வேண்டுமோ அவை அத்தனையும் ஈரோவின் மூலம் வாங்கிக் கொள்ளலாம், பெட்ரோலைத் தவிர்த்து.

இவ்வாறு ஈரோவின் புழக்கம் அதிகமாவதும் ஐரோப்பிய நாடுகள் ஈரோவில் வர்த்தக பரிமாற்றங்கள் செய்வதும் அமேரிக்காவின் டாலர் புழக்கத்தை வெகுவாக பாதிக்கத் தொடங்கியது.

இந்த உலக வர்த்தக பரிமாற்றங்களில் அதிகமான வர்த்தகம் பெட்ரோல் வர்த்தகம்தான் என்பதை புதிதாக ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. உலகிலேயே அமேரிக்காதான் தற்போது எண்ணெய் இறக்குமதியில் முதலிடம் வகிக்கிறது. ஒரு நாளைக்கு 20 மில்லியன் பேரல்கள் இறக்குமதி செய்யக்கூடிய அமேரிக்க தனது இந்த வர்த்தகத்திற்க்கு டாலர் அல்லாமல் ஈரோவில்தான் கட்டணம் செலுத்த வேண்டுமென்றால், கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அதிலும் தற்போது இருக்கக் கூடிய வருடத்திற்க்கு 500 பில்லியன் டாலர் பற்றாக்குறை பட்ஜெட் வைத்துக் கொண்டு, நினைத்துப் பார்க்கவே இயலாத அளவிற்கு ஒரு பொருளாதார படுகுழியின் விளிம்பில் நின்றுக் கொண்டிருக்கிறது அமேரிக்கா!

அதுமட்டுமா? அமேரிக்காவின் அதிகமான எண்ணெய் இறக்குமதி சவுதி அரேபியாவிலிருந்துதான் செய்யப் படுகிறது. இந்த இரு நாட்டிற்க்கும் உள்ள ஒரு விசித்திரமான ஒப்பந்தத்தின்படி சவுதி ரியாலின் மதிப்பு அமேரிக்கா டாலருக்கு எதிராக எந்தவித மாற்றங்களும் செய்யாமல், அதாவது இரு நாட்டு கரன்சிகளும் எப்படிப்பட்ட பணவீக்கம் நிகழ்ந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு குறையாமல் கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. உலகில் எல்லா பாகங்களிலும் அமேரிக்கா டாலர்கள் மதிப்பிழந்து வரும்போது சவுதியுடன் மட்டும் நிர்ணயிக்கப்பட்ட அளவு குறையாமல் வர்த்தக பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பில்லியன் கணக்கில் சவுதி அரேபியா வருமானத்தை இழந்து வருகிறது. இப்படி ஏற்படும் இழப்புகளின் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி அமேரிக்கா பிரிண்டிங் பிரஸ் மூலமாக தீர்த்துக் கொள்கிறதோ அதே போல் சவுதி அரேபியா பெட்ரோல் பம்புகள் மூலம் சரி செய்து கொள்கிறது. பெருகிவரும் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளில் இப்படி அச்சடிப்பதும், நிலத்திலிருந்து பம்ப் செய்வதுமாக இன்னும் எத்தனை நாளைக்குத்தான் செயல்படுவது?

ஈரோவின் இந்த உறுதியான மற்றும் குறிவைத்த முன்னேற்ற நடை பெட்ரோல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை எப்படி டாலரிலிருந்து ஈரோவிற்க்கு மாற்றுகிறது என்பதை பார்ப்போம்.

ஆகஸ்ட் 2002ல் ஈரான் தனது அந்நிய செலாவனி கையிருப்பில் பாதியை ஈரோவாக மாற்றிவிட்டது. எண்ணெய் வளத்தில் உலகின் ஐந்தாவது இடத்தில் இருக்கக் கூடிய ஈரான் தனது பெட்ரோல் வர்த்தகங்களை ஈரோவில் மாற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அதே வருடம் உலகில் பெட்ரோல் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருக்கக் கூடிய ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுடன் குறிப்பாக ஜெர்மனியுடனான வர்த்தகம் ஈரோவில்தான் செய்யப்படும் என்று பேச்சுவார்த்தையில் இறங்கி ஒப்பந்தமும் ஆகிவிட்டது.

எண்ணெய் உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருக்கக் கூடிய வெனிசூலா பதிமூன்று வளரும் நாடுகளுடன் பார்ட்டர் (Barter deal) ஒப்பந்தம் செய்து கொண்டு தனது எண்ணெய் வர்த்தகத்திற்க்கு ஈடாக அந்தந்த நாடுகளுடைய பொருட்களை இறக்குமதி செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதற்கெல்லாம் முன்னோடியாக தனது பெட்ரோல் வர்த்தகத்தை ஈரோவிற்கு மாற்றிய முதல் நாடு ஈராக். எண்ணெய் வளத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கக் கூடிய ஈராக் நவம்பர் 2000 ல் தனது வர்த்தகத்தை அதாவது oil for food என்று ஐ.நா. வினால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகத்தை முற்றிலுமாக ஈரோவிற்கு மாற்றியது. அதுமட்டுமல்லாமல், ஐ.நா. மூலமாக தான் வைத்திருந்த 10 பில்லியன் டாலரையும் ஈரோவாக மாற்றிக் கொண்டது. இதனால மூன்றில் இரண்டு பங்கு பெட்ரோலை ஈராக்கிடமிருந்து வாங்கிக் கொண்டிருந்த அமேரிக்க கம்பேனிகள் ஈராக்கிற்க்கு ஈரோவின் மூலம் பணம் செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்க்கு உள்ளானது. இச்சூழலில் ஜோர்டான் நாடும் ஈராக்கும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஜோர்டான் ஈராக்கிற்க்கு ஈரோவின் மூலம் பெட்ரோல் வர்த்தகம் செய்ய ஆரம்பித்தது.

இப்படி அங்கும் இங்குமாக டாலருக்கு போட்டியாக இருந்துக் கொண்டிருந்த ஈரோ கடைசியில் டாலரின் ராஜ்யமான பெட்ரோலில் கைவைக்க ஆரம்பித்தது அமேரிக்காவிற்கு நேர்ந்த மிகப் பெரும் பிரச்சனை.

இந்நிலையில்தான் வெந்த புண்ணில் வேலைச் செறுகியது போல் ஒபெக் நாடுகளும் தனது பெட்ரோல் வர்த்தகத்தை ஈரோவிற்கு மாற்றலாமா என்ற ஆய்வில் இறங்கியது. 'நீண்டகால எண்ணெய் வர்த்தகத்தை கணக்கில் கொண்டு பார்த்தால் டாலரிலிருந்து ஈரோவிற்கு மாற்றுவதால் எந்த கெடுதலும் வருவதாக தெரியவில்லை' என்று ஒபெக் அமைப்பின் ஜாவித் யெர்ஜானி என்பவர் தெரிவித்த கருத்து ஒபெக் நாடுகளின் வர்த்தக சிந்தனையில் வந்த மாற்றத்தை தெளிவுபடுத்துகிறது. (Javed Yerjani, head of OPEC market analysis dept., in his speech in April 2002).

அவர் அப்படி சொன்னதற்கான காரணம் உலகில் மொத்த எண்ணெய் இறக்குமதியில் (25%) முதல் இடத்தில் இருக்கக் கூடிய அமேரிக்காவைவிட ஐரோப்பிய யூனியனில் இருக்கக் கூடிய அனைத்து நாடுகளின் மொத்த இறக்குமதி 27% இருப்பதுதான். இன்னும் சில நாடுகள் இந்த யூனியனில் சேரவிருப்பதை கணக்கில் சேர்த்தால் இது இன்னும் 30 லிருந்து 35% உயர இருக்கிறது. அமேரிக்காவைவிட 30% அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த ஐரோப்பிய யூனியன் அமேரிக்கவின் பொருளாதார வர்த்தகத்தைவிட அதிகாமகக் கொண்டதால் டாலரின் இடத்தை ஈரோ பிடிக்க இருப்பதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை.

சீனாவின் இறக்குமதியும், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியும் இன்றுவரை டாலரில்தான் நடந்து வருகிறது. இதுவும் ஈரோவிற்கு மாறும் பட்சத்தில் ஒபெக் நாடுகளின் ஏற்றுமதியில் 70% அமேரிக்கவைத் தவிர்த்து மற்ற நாடுகளுக்குத்தான் இருக்கும். இந்த சூழ்நிலையில் ஒபெக் நாடுகளின் வர்த்தகம் ஈரோவிற்கு மாறினால் அமேரிக்காவின் பொருளாதாரம் சரிந்துவிடும் என்று சொல்வதைவிட அழிந்துவிடும் என்று சொல்வதே மிகப் பொருத்தம்.

இதற்கிடையில் நீண்ட காலமாக எதிர்பார்த்த காஸ்பியன் எண்ணெய் சுரங்கம் வெறும் 4% ரிசர்வ்தான் என்பது 2002ல் தெளிவாகிப்போக அமேரிக்க முதலீடு செய்த ஆப்கான் அபகரிப்பு பிரயோசனமற்றதாகிப் போனது. அதுமட்டுமா? இருக்கும் 4% எண்ணெயும் தரமற்றது என்பதும் சோதனையில் தெளிவாகிப் போனது. சவுதியை விட காஸ்பியன் மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளில் அதிகமான எண்ணெய் இருப்பதாக ஆய்வுகளில் (சாட்டிலைட்) தெரியவந்தபின் தான் அமேரிக்கா ஆப்கானிய அரசாங்கத்துடன் அதுவும் தலபான் அரசுடன் பேச்சு வார்த்தை கூட நடத்தியது. கடைசியில் அமேரிக்காவின் கணக்கு தவறாக இருக்க அமேரிக்கா வேறு வழியில்லாமல் மத்திய கிழக்கு நாடுகளில் தனது கவனத்தை மீண்டும் வேறொரு கோணத்தில் திசை திருப்பியது.

அமேரிக்காவின் பொருளாதாரத்தை பாதுகாக்க இராணுவ உலகில் தன்னிகரற்று, திமிருடன் இருக்கும் அமேரிக்க இராணுவத்தை களத்தில் இறக்குவதே ஒரே சிறந்த வழி என்று முடிவெடுத்தது அமேரிக்கா.

(தொடரும்)

1 comment:

Akbar Batcha said...

Hi Rajah,

I saw your comments as reply to some of the controversial postings. Why are you so vocal and rebellion mood? Its all in the game. Anything can be used to achieve the result, that is the order of the day now. We are passing a difficult phase in which everything is being criticized and connieved.